உங்களுக்கு ஏற்ற பெஸ்ட் ஆப்ஷன் !
செலக்ஷன்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போது பலர் குழம்பும் விஷயம், டிவிடெண்ட், டிவிடெண்ட் மறுமுதலீடு, குரோத்... இம்மூன்றில் எதைத் தேர்வு செய்வது என்பதே. இம்மூன்றில் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போமா?
டிவிடெண்ட் ஆப்ஷன் !
முதலீடு செய்துள்ள ஃபண்டின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் லாபத்தை பிரித்துத் தருவதுதான் டிவிடெண்ட் எனப்படும். எந்த வகையான ஃபண்ட் என்றாலும் இந்த வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. இடையிடையே வருமானம் வேண்டும் என்பவர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.
குரோத் ஆப்ஷன் !
இந்த ஆப்ஷனில் மூலதனம் என்பது வளர்ந்துகொண்டே வரும். பணம் தேவைப்படும்போது யூனிட்களை விற்று பணமாக்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில், பங்கு சார்ந்த ஃபண்டுகளில் (திரட்டப்படும் நிதியில் 65 சதவிகிதத்துக்கு மேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது) ஓராண்டுக்கு மேல் யூனிட்களை விற்று லாபம் பார்த்தால், ஆதாயத்துக்கு வருமான வரிக் கட்டத் தேவையில்லை. அந்த வகையில், யூனிட்களை விற்கும்போது வருமான வரிக் கட்ட வேண்டியிருக்குமா? சற்று காலதாமதப்படுத்தி யூனிட்களை விற்றால் லாபமாக இருக்குமா? உங்களின் பணத் தேவை எப்படி? என்பதைப் பொறுத்து முடிவு செய்யவும்.
ஓராண்டுக்கு முன் பங்கு சார்ந்த ஃபண்டுகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் ஆதாயத்துக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி (ஷார்ட் டேர்ம் கேப்பிட்டல் கெய்ன் டாக்ஸ்) 15% கட்டவேண்டிவரும். மற்ற ஃபண்டுகளுக்கு குறுகிய கால மூலதன ஆதாயவரி 30%, நீண்டகால மூலதன ஆதாய வரி பணவீக்க சரிக் கட்டல் இல்லாமல் 10% (பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20%) கட்டவேண்டி வரும் என்பதைக் கவனத்தில்கொண்டு யூனிட்களை விற்கவும்.
டிவிடெண்ட் ஆப்ஷன் முறையில் முதலீடு செய்து யூனிட்களை விற்று பணமாக்கும் போதும் மேலே கூறப்பட்டுள்ள முறையில்தான் வருமான வரி கணக்கிடப்படுகிறது.
டிவிடெண்ட் மறுமுதலீடு ஆப்ஷன்:
முதலீடு செய்த ஃபண்டிலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்தை, உங்களுக்குத் தருவதற்குப் பதில் அந்த மதிப்பிற்கு அந்த ஃபண்டின் யூனிட்களாக நமது கணக்கில் வரவு வைக்கப்படுவதுதான் டிவிடெண்ட் மறுமுதலீடு ஆப்ஷன்.
உதாரணத்திற்கு, முதலீடு செய்துள்ள ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பு ரூ.12 என்று வைத்துக்கொள்வோம். அந்த ஃபண்ட் 10 சதவிகிதம் டிவிடெண்ட் வழங்குகிறது என்றால், 1 ரூபாய் நமக்கு டிவிடெண்டாக (முக மதிப்பு 10 ரூபாய்) கிடைக்கும். இந்த டிவிடெண்ட் தொகையை தற்போதைய என்.ஏ.வி. மதிப்பில் யூனிட்கள் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும்.
டிவிடெண்ட் மறுமுதலீடு ஆப்ஷன் என்கிறபோது, மறுமுதலீடு டிவிடெண்ட் தேதியிலிருந்து ஓராண்டுக்குள் யூனிட்களை விற்றால் (ஈக்விட்டி ஃபண்ட்) குறுகியகால மூலதன ஆதாயவரி கட்டவேண்டி வரும். இதுவே, வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். என்கிறபோது, மூன்றாண்டுகளுக்கு டிவிடெண்ட் மறுமுதலீடு மூலம் கிடைத்த யூனிட்களை விற்க முடியாது.
எந்த ஆப்ஷன் சிறந்தது?
உங்களுக்கு எவ்வளவு நாட்களுக்குள் அல்லது ஆண்டுக்குள் பணம் தேவை என்பதைப் பொறுத்து டிவிடெண்ட் மற்றும் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள். அப்போது அதற்கான வருமான வரிக் கட்ட வேண்டுமா என்பதையும் கவனியுங்கள். டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆப்ஷனுக்குப் பதில் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது நல்லது.
ஃபண்டுகளைப் பொறுத்தவரை, டிவிடெண்ட் ஆப்ஷனுக்கு தனி என்.ஏ.வி. மதிப்பும், குரோத் ஆப்ஷனுக்கு தனி என்.ஏ.வி. மதிப்பும் இருக்கும். அந்த வகையில் பார்த்தால், உங்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டபிறகு அதன் என்.ஏ.வி. மதிப்புக் குறைந்துவிடும். அதேநேரத்தில், குரோத் ஃபண்டில் அதன் மதிப்புக் குறையாமல் அப்படியே இருக்கும். டிவிடெண்ட் மறுமுதலீடு என்பதில், டிவிடெண்ட் தொகைக்கு ஏற்ப யூனிட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், மொத்த யூனிட்களின் மதிப்பு குரோத் ஆப்ஷனுக்கு இணையாக இருக்கும். அந்தவகையில் லாக் இன் பிரச்னையிலிருந்து தப்ப டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆப்ஷனுக்குப் பதில், குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது லாபகரமாக அமையும்.
No comments:
Post a Comment