Saturday, 13 April 2013

தொழிலக உற்பத்தி விகிதம் 0.6%-ஆக குறைவு


பிப்ரவரி மாத தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவின் வளர்ச்சி விகிதக் குறியீடு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 4.3 சதவீதமாக இருந்தது. இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் உற்பத்தி விகிதம் 2.4 சதவீதமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.
தயாரிப்புத் துறை மந்தமாக உள்ளதையே இது காட்டுகிறது என்றும் உற்பத்தியை ஊக்குவிக்க வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு வர்த்தக, தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மின் உற்பத்தி மோசமடைந்திருப்பது, நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளது, தயாரிப்புத் துறை தேக்கம் அடைந்துள்ளது ஆகிய காரணங்களால், பிப்ரவரி மாத தொழிலக உற்பத்தி விகிதம் மிகவும் குறைந்த அளவில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்டேக் சிங் அலுவாலியா கருத்து: பிப்ரவரி மாத தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.6 சதவீதமாக குறைந்துள்ளது பற்றி திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியது:
தொழிற்சாலைகளில் நடைபெறும் உற்பத்தியைப் பொருத்தவரை, 2012-2013 நிதி ஆண்டு சுமாரானதுதான். ஆனால் 2013-2014-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியும். தொழிலக உற்பத்தி விகிதம் வளர்ச்சியே காணவில்லை என்பதைவிட, குறைவாக உள்ளது என்பது சற்று ஆறுதலைத் தருகிறது. நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி குறைந்திருப்பதுதான் தொழிலக உற்பத்தி விகிதம் குறைந்ததற்கு முக்கிய காரணம். இது விரைவில் சரி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
Source:  Dinamani

No comments:

Post a Comment